டிசம்பரில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு IMFஅனுமதி அளிக்கும்: ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதிய சபை 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு டிசம்பரில் அனுமதியளிக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதன் பின்னர், இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான கலந்துரையாடலை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்கள் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் முறைகள் தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு ஆதரவளிக்கவோ அல்லது அதன் கடனை மறுசீரமைக்கவோ தயாராக இல்லை என இந்தியாவோ அல்லது சீனாவோ எந்த நாடும் கூறவில்லை.
எனவே அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமுர்த்தி பயனாளிகள், முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பெறுபவர்களுக்கு மேலதிக நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதி நெருக்கடியினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியவர்களும் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மேலதிக மானியத்திற்கு தகுதியுடையவர்களாவர்.

இத்திட்டம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடைபெறும் என்றும், இத்திட்டத்திற்காக 43 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

தேவைப்படுவோருக்கு பாதுகாப்பு வலையமைப்பை வழங்கும் போது, ​​வரவு செலவுத் திட்டத்தினூடாக, உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் மற்றும் நிலையான நிதி அமைப்பை உருவாக்கவும் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை எதிர்க் கட்சிகள் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply