இலங்கையில் பணியிடங்களில் வருடாந்தம் 4,000 விபத்துக்கள் பதிவு

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனத்தை பட்டய நிறுவனமாக நிறுவுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவிலேயே சிறந்த சேவை மையமாக இதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கான திறமையும் வளங்களும் தலைமைத்துவமும் இந்த நிறுவனத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் பணியிடங்களில் வருடாந்தம் 4,000 விபத்துக்கள் பதிவாவதாகவும், இதன் விளைவாக ஒரு வருடத்தில் 600,000 வேலை நாட்கள் இழக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ள நிலையில், தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழுவை நிறுவுதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு முறையை நிறுவுதல் என்பன அதன் பிரதான முன்மொழிவுகளில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கையானது தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், உற்பத்தித்திறன் அடிப்படையில் உள்ள குறைபாடுகள் காரணமாக முதலாளிகள் மீது தேவையற்ற சுமைகளை உயர்த்தவும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, வருடாந்தம் 2.2 மில்லியன் மக்கள் தொழில் விபத்துக்கள் மற்றும் நோய்களால் இறக்கின்றனர், அதே நேரத்தில் 270 மில்லியன் பேர் தீவிரமான மற்றும் ஆபத்தான விபத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் 160 மில்லியன் பேர் குறுகிய கால அல்லது நீண்ட கால நோயாளிகளாக மாறுகிறார்கள், அதே நேரத்தில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% விபத்துக்கள் மற்றும் உடல் நலக்குறைவுகளுக்கு செலவிடப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் தொடர்பாடல் திட்டத்தின் மூலம் தேசிய மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் செயற்படும் என்றும், அதன்மூலம் தனியார் துறை நிறுவனத்தைப் போன்று நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உழைக்கும் என்றும் அதெரிவித்தார்.

Leave a Reply