கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை ஒத்திவைத்துள்ளதாக, சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் முன்வைத்துள்ள கேள்விகள் சந்தேகங்களிற்கு மத்திய வங்கியும் திறைசேரி அதிகாரிகளும் பதிலளிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்காக இடம்பெறவிருந்த கடன் பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 மில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கான இணக்கப்பாட்டினை எட்டிய பின்னர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை செப்டம்பரில் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
காலநிலையை மையமாகக் கொண்ட நிதியில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான ‘இயற்கைக்கான கடன்’ பரிமாற்ற உடன்படிக்கை குறித்து இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,
இந்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் இலங்கை, ஈக்குவடோர் மற்றும் ஆபிரிக்காவின் கேப் வேட் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கை ஒரு பில்லியன் டொலர் வசதிக்காகவும், ஈக்குவடோர் 800 மில்லியன் டொலர்களுக்காகவும், கேப் வேட் 200 மில்லியன் டொலர்களுக்காகவும் பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இலங்கை உட்பட்ட குறித்த நாடுகள், இந்தக் கலந்துரையாடல் குறித்து தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தை எங்கு இடம்பெறுகிறது? எந்த நாடுகள் இந்த நிதியை வழங்கவுள்ளன என்ற விடயங்கள் வெளியிடப்படவில்லை.
இது, எகிப்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் கொப் 27 உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்ட விடயமாகும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய நட்டத்துக்கான கட்டணத்தை யார் செலுத்துவது என்பது குறித்து உலகத் தலைவர்கள் எதிர்கொள்ளும் தீர்க்க முடியாத சிக்கலை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்தகைய இயற்கைக் கடன் உடன்படிக்கை அமைவதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக காலநிலையில் பாதிப்பை செல்வாக்கு செலுத்தும் வளர்ந்த நாடுகள், அந்த பாதிப்பை எதிர்நோக்கும் வளர்முக நாடுகளுக்கு நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று கோரிக்கையும் கொப் 27 மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.
எனினும் அந்த கோரிக்கையில் இறுதியாக தீர்மானம் எவையும் எட்டப்படவில்லை என்று மாநாட்டில் பங்கேற்ற இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.





