 (1)_637b4c289655f.png)
கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் கட்சி பேதமின்றி வழமை போன்று முன்னாள் போராளிகளின் தலைமையிலேயே மாவீரர் தின நிகழ்வு முன்னெடுக்கப்படும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என முன்னாள் போராளியான நாகமணி கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின முன்னேற்பாட்டின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் வழமை போன்று மாவீரர் தின ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. வழமையாக முன்னாள் போராளிகளின் ஒழுங்கமைப்பின் கீழ் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்தினால் தடைகள் ஏற்படுத்தப்பட்டமையால் எங்களால் இதனைச் செய்ய முடியவில்லை.
ஆனால் தற்போதைய நிலையில் ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கின்றமையால் எமது உறவுகளுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை உணர்வுபூர்வமாக மேற்கொள்ள முடியும். இதனை நாங்கள் அனைத்து மாவீரர் குடும்பங்களுக்கும், உறவுகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.
மாவீரர் தின ஏற்பாடுகளுக்காக மாவீரர் துயிலுமில்லம் துப்பரவுப் பணிகளை கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றார்கள். நாங்கள் வழமை போன்று இதனை முன்னாள் போராளிகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளோம்.
இது மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு இதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரின், அனைத்து மக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். எதிர்வரும் 27ம் திகதி மிகவும் எழுச்சியுடன் இந்த நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.





