நுவரெலியா பேருந்து சாரதிகள் இ நடத்துனர்கள் பணி புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் தொடர்ந்து பணி புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெளிமடை,கதிர்காமம்,பதுளை,எல்ல,பண்டாரவளை போன்ற பிரதேசங்களில் இருந்து இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்குள் நிறுத்தப்படாமல் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பேருந்து நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் உரிய பேருந்துகள் பிரதான பேருந்து நிலையத்துக்குள் உட்செல்லக் கூடாது என தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நுவரெலியாவில் இயக்கப்படும் அரச பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பணி புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நுவரெலியாவில் இருந்து இயக்கப்படும் அரச பேருந்துகள் நுவரெலியா – உடபுசல்லாவ பிரதான வீதியில் அமைந்துள்ள நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபையின் காரியாலயத்துக்கு அருகில் கடமைக்குச் செல்லாது தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.  தமக்கான உரிய தீர்வை பெற்றுத்தரும் வரை இப் பணி புறக்கணிப்பு தொடரும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பணி புறக்கணிப்பு காரணமாக நேற்று மாலை தொடக்கம் இன்று வரை பாடசாலை மாணவர்கள் உட்பட அரச ஊழியர்கள் மற்றும் மாதாந்த அரச பேருந்து பருவச் சீட்டினை பெற்றுக்கொண்டவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply