டுவிட்டரில் பொறியியல், விற்பனை பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு: எலான் மஸ்க்

வாஷிங்டன்,நவ 22

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்து, பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியல் தயாரானது. இதன்படி, 7,500 பணியாளர்களில் 3-ல் இரண்டு பங்கு ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில், உயர் பதவி வகித்தவர்களும் அடங்குவார்கள். எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய 3 வாரங்களுக்குள் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும், பணியில் உள்ள ஊழியர்களுடனான கூட்டத்திற்கு பின்பு மஸ்க் கூறும்போது, டுவிட்டர் நிறுவனத்தில் பொறியியல் மற்றும் விற்பனை பிரிவில் உள்ள பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும் என கூறியுள்ளார். இதற்காக தகுதி வாய்ந்த நபர்களை பரிந்துரைக்கும்படியும் ஊழியர்களை அவர் கேட்டு கொண்டுள்ளார். டுவிட்டர் வலைதளத்தில் இந்த பதவிகளுக்கான வாய்ப்பு பற்றிய விளம்பரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை. பொறியியல் மற்றும் விற்பனை பிரிவில் டுவிட்டர் நிறுவனத்திற்கு தேவையான, குறிப்பிட்ட பதவியின் பெயரையும் மஸ்க் கூறவில்லை. எனினும், சிறந்த முறையில் மென்பொருள் எழுதுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என மஸ்க் கூறியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது.

Leave a Reply