யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயை பார்க்க சென்ற சகோதரர்களை, அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயுற்று 3 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு தாயைப் பார்ப்பதற்காக கடந்த சனிக்கிழமை மூன்று சகோதரர்கள் சென்றுள்ளனர். அதில் இரண்டாவது சகோதரரிம் மட்டுமே அனுமதிச் சீட்டு (பாஸ்) இருந்த நிலையில், அவரை மட்டும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளே அனுப்பியுள்ளனர்.
மற்றைய இருவரும் வரிசையில் காத்திருந்தனர். அதில் மூத்த சகோதரன் தாயை சென்று பார்வையிட அனுமதிக்குமாறு, பாதுகாப்பு உத்தியோகத்தரை கேட்டபோதும் அவரை உள்ளே விடாமல் அவரை தள்ளி விட்டுள்ளார்.
இதனால் குறித்த நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் பாதுகாப்பு தலைமை அதிகாரி (ஓ.ஐ.சி) குறித்த நபரை தாக்கியுள்ளார். ஏன் என்னை தாக்குகிறீர்கள் என்று நியாயம் கேட்டவரை, அங்கிருந்த அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அவரின் சேட்டை இழுத்து கிழித்து சுற்றி நின்று தாக்கியுள்ளனர்.
அதனை பார்த்த மற்ற சகோதரன் இதனை தடுக்க முற்பட்டும் அவரால் முடியவில்லை. நாங்கள் திரும்பி செல்கின்றோம் என கூறியும் அவர்களை விடாததால் வைத்தியசாலைக்குள் சென்ற சகோதரனுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கியதில் மூத்த சகோதரனுக்கு இரத்தம் வழிந்தோட, குறித்த இடத்திற்கு வந்த இரண்டாவது சகோதரன், இதனைப் பார்த்ததும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடுமையாக தாக்கியதில், கீழே விழுந்தவருடைய கால் சீமெந்து கட்டில் அடிபட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவருடை காலில் தாக்கியதில் அவருடைய கால் முறிந்துள்ளது.
பின்னர் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் அங்கு வந்து அவர்களை தடுத்துள்ளனர். பின்னர் இரண்டு சகோதரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கால் முறிந்தவருக்கு எதிர்வரும் நாளில் சத்திர சிகிச்சையும் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், நேற்றைய தினம் பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

இதைத்தொடர்ந்து, இந்த வாக்குவாதத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்ததாக தெரிவித்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், அவரின் உடலில் ஒரு காயமும் இல்லை, வெறும் கண்துடைப்புக்காக அவரை இவ்வாறு அனுமதித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இரு சகோதரர்களில் ஒருவர் சமுர்த்தி உத்தியோகத்தர், மற்றையவர் தபால் ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





