காலி – உனவட்டுன பகுதியில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இருக்கும் ரஷ்ய நாட்டு குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலியில் நேற்றைய தினம் ரயில் ஒன்றுடன், முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில், ரஷ்ய நாட்டு பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்திருந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த ரஷ்ய நாட்டு பெண்ணின் மூன்று வயது குழந்தையே இவ்வாறு நிர்க்கதிக்குள்ளான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த பெண் மற்றும் அவரின் குழந்தை ஆகியோர் உனவட்டு பகுதியில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த குழந்தையை பாதுகாப்பு நிலையமொன்றில் நிறுத்தி விட்டு, வெளியில் சென்ற ரஷ்ய நாட்டு பெண், மீள பாதுகாப்பு நிலையத்தை நோக்கி வருகைத் தந்த சந்தர்ப்பத்திலேயே விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குழந்தை ரஷ்ய நாட்டு பிரஜைகளுக்கு இலங்கையில் உறவினர்கள் கிடையாது என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் ஊடாக, அவரது உறவினரை தொடர்புக் கொள்ளும் வரை, குறித்த குழந்தையை பாதுகாப்பு மத்திய நிலையத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெலிஅத்த பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில், முச்சக்கரவண்டி ஒன்று நேற்றைய தினம் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
உனவட்டுன பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்தது.
விபத்தில் ரஷ்ய நாட்டு பிரஜை மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
முச்சக்கரவண் சாரதி, கவனயீனமாக வண்டியை செலுத்தியுள்ளமை, விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை விளக்கு செயலிழந்துள்ளதாக அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், முச்சக்கரவண்டியை முன்னோக்கி செலுத்த வேண்டாம் என அங்கிருந்தவர்கள் கூச்சலிட்ட போதிலும், சாரதி அதனையும் பொருட்படுத்தாது முச்சக்கரவண்டியை முன்னோக்கி செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தை அடுத்து, முச்சக்கரவண்டியில் தீ பரவியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உனவட்டுன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





