இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.
அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் – பாலஸ்தீனர்கள் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் நப்லஸ் நகரில் ஹவ்ரா என்ற பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 3 பாலஸ்தீனர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் விசாரணை நடத்தினார். அதில், ஒரு நபர் பாதுகாப்பு படை வீரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், பாதுகாப்பு படை வீரர் வைத்திருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்டார்.
மேலும், தான் வைத்திருந்த கத்தியை கொண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரையும் தாக்கினார். துப்பாக்கியை பறித்துக்கொள்ள முயற்சித்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சியடைந்த இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியரை சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கத்திக்குத்து தாக்குதலில் கழுத்தில் காயமடைந்த வீரரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த முழு நிகழ்வும் வீடியோவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.





