கொழும்பு,டிச 04
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மின்வெட்டு நீடிக்கப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய மின் உற்பத்தியானது, தேசிய மின் கட்டமைப்பை தற்போதைய நிலையிலேயே பராமரிக்க போதுமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்கு தேவையான நெப்தா எண்ணெய் முடிவடைந்ததால் நேற்று நள்ளிரவு முதல் களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளது.
இதன் காரணமாக, தேசிய மின்கட்டமைப்பு 165 மெகாவாட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நுரைச்சோலை மின்நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் 300 மெகாவாட் மின்சாரம் விரைவில் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பை அதிகாரிகள் புறக்கணிப்பதாக மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
நிலக்கரி அல்லது டீசலுடன் ஒப்பிடும் போது நெப்தாவின் விலை மிகக் குறைவாக இருந்தாலும், அந்த குறைந்த செலவுடைய பொருளை அதிகாரிகள் பராமரிக்க தவறியமை பிரச்சினைக்குரியது என அதன் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.
மேலும், அனைத்து மத ஸ்தலங்களிலும் சூரியப்படலங்களை நிறுவும் திட்டம் விரைவுபடுத்தப்படும் என பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சார விநியோகம், பெற்றோலியப் பொருட்கள், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.





