அண்மைக்காலமாக தியாவட்டவான், மஜ்மா நகர் பிரதேசத்தில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள காட்டு யானைகளின் ஊடுருவலைத் தடுக்கவும் மக்கள் குடியிருப்புக்களில் நுழையும் யானைகளை விரட்டியடிக்கவும் வன இலாகா அதிகாரிகளும், ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கல்குடா டைவர்ஸ் அணியினரும் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தியாவட்டவான், பாலை நகர் பிரதேசத்தில் ஊடுருவிய யானைகள் பாடசாலை மதில் தோட்டம் மற்றும் பிரதேசவாசிகளின் மதில்களையும் உடைத்து சேதப்படுத்தியிருந்தது.
இவ்வாறு உள்நுழைந்த யானைகளை கல்குடா டைவர்ஸ் அணியின் முன்னணி செயற்பாட்டாளரான முஹம்மது ஹலீம் அணியினர் விரட்டியடித்ததுடன், அன்றிரவு முழுவதும் யானை விரட்டும் பணியில் அதன் களச்செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன், பணியில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்த வன இலாகா அதிகாரிகள், ஒரு தொகுதி யானை வெடிகளை வழங்கியதுடன், அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.
இது தொடர்பில் களச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், காட்டு யானைகளின் ஊடுருவலால் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிர், உடமைகளையும் இழந்து வருகின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் பிரதேச நலன்விரும்பிகள் இரவு, பகலாக யானை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதே இப்பிரதேச மக்களின் கோரிக்கையாகும் எனத் தெரிவித்தார்.





