வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! சபா குகதாஸ் SamugamMedia

இலங்கைத் தீவில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமை தொடர்ந்து பலம் இழந்த நிலையை நோக்கி செல்வதற்கு இலங்கை அரசின் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தான் காரணம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கிய தமிழர் தாயகத்தின் ஐனநாயகப் பிரதிநிதிகளின் பலம் மிக வீழ்ச்சியடைந்த நிலையில், அரச நிர்வாக அதிகாரிகளின் அடாவடி நடவடிக்கைகள், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்தியுள்ளது.

இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடாத்தப்பட வேண்டும்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது வடக்கு மாகாணசபைத் தேர்தல் இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே நடைபெற்றது.

பின்னர் அந்த சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. இது தொடருமாக இருந்தால் மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் இருப்புக்கள் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டு கட்டமைப்பு சார் இன அழிப்பு தீவிரம் அடைந்துவிடும்.

ஆகவே வடகிழக்கு மக்களின் ஐனநாயக உரிமையை பாதுகாக்க மாகாணசபைத் தேர்தல் அவசியமானதாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்ற தீர்ப்புக்களை மீறி அரச இயந்திரம் மக்களின் உரிமைகளைப் பறிக்கின்றது.

உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் ஆதி சிவன் கோயிலை இடித்து விகாரை அமைப்பதை தடுக்க நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்கிற்கு நீதிமன்றம்  விகாரை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியும் அதனை மீறி விகாரை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சட்டவாட்சி இன்றி அரச இயந்திரத்தின் ஏதேச்சதிகார செயல் பாடுகளே மேலோங்கியுள்ளது.- எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply