பொறுப்பேற்க முடியாத குழந்தைகளை ஒப்படைக்க நிலையம்! அமைச்சர் கீதா வெளியிட்ட தகவல்

தங்களால் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாத குழந்தைகள் இருப்பின், அவற்றை ஒப்படைப்பதற்கான பிரத்தியேக நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தனி ஒரு பெண்ணினால் குழந்தையை வளர்த்தெடுக்க முடியுமாக இருக்க வேண்டும்.

உலகில் உள்ள ஏனைய நாடுகளில் பிரசவிக்கப்படுகின்ற குழந்தைகள் அநாதைகளாக்கப்படுவதில்லை, தாய்ப்பால் ஊட்டும் காலம் வரை ஒரு குழந்தை தாயின் அரவணைப்பில் இருக்கின்றது.

அதன்பின்னராக பராமரிப்புகளுக்கு பகல் நேர பராமரிப்பு நிலையங்கள் உள்ளன.

அவற்றில் குழந்தைகளை விட்டுவிட்டு, தாய்மார் தொழிலுக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு பல குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய விடயமல்ல.

இலங்கையில் போல உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்றெல்லாம் கேட்க மாட்டார்கள்.

இதுபோன்ற சில விடயங்களால் தான் இலங்கையில் குழந்தைகளை தொடரூந்துகளில் விட்டுச் செல்வது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

ஒரு பெண்ணினால் தன் குழந்தையை தனியாக வளர்க்க முடியும்.

திருமணம் செய்துக்கொள்ளாமல் இந்த சமூகத்தில் வாழ முடியாது, திருமணம் இன்றி குழந்தை பிறந்ததால் இந்த சமூகத்தில் மானத்துடன் வாழ இயலாது என்பது தான் அண்மையில் தொடரூந்தில் குழந்தையை விட்டுச்சென்ற பெண்ணின் கருத்தாக இருந்தது.

இவர்களது இந்த மனநிலையை சொல்லி பிரசவித்த குழந்தையை ஒப்படைக்கும் முறையான பொறிமுறையொன்று இருக்குமானால் அது மிகவும் சிறந்ததாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply