அரசுத் துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
மார்ச் 20 ஆம் திகதி முதல் இந்த கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவிலான அன்னியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நகர முதல்வர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கான பொழுது போக்கு கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, தினமொன்றுக்கு 40 அமெரிக்க டொலர்கள், 30 நாட்கள் என்ற கொடுப்பனவு முறையை 25 டொலர்கள் 15 நாட்கள் என்ற அளவில் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்படக்கூடிய 750 அமெரிக்க டொலர் பொழுதுபோக்கு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.