சிவனொளிபாதமலையில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளியான புதிய தகவல்!SamugamMedia

சிவனொளிபாதமலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்தமை சுகாதாரத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் லிஸ்டீரியா நோயால் பீடிக்கப்பட்டு, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு லிஸ்டீரியா நோய் தொற்றியுள்ளமை, ஆரம்ப பரிசோதனைகளில் உறுதியானதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்ததாக, சமூக வலைதளங்களில் வெளியான தகவலை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ முன்னதாக தெரிவித்திருந்தார்.

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரும், யாத்திரையில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவரும், வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிலளித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர்,

மற்றுமொரு பாதையில் உள்ள சிறிய கடை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆய்வுகள் மற்றும் விசாரணை நிறைவுபெறும் வரையில், எந்தத் தகவலையும் வெளியிட முடியாது என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சமூக வைத்திய நிபுணர் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா, இது தொடர்பான பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமையால், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

 சிவனொளிபாத மலைக்கு செல்லும் பகுதியில், லிஸ்டீரியா நோய்த் தொற்று பரவுவதாக சமூகவலைதளங்களில் தகவல்களைக் காணமுடிகிறது.

 இந்த நிலைமை குறித்து ஆராயப்பட்டுள்ளது. தற்போது வரை லிஸ்டீரியா நோய் தொற்றுடன் ஒருவர் மாத்திரமே துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவினர் மற்றும் சமூக வைத்திய நிபுணர்கள் ஊடாக ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 அந்த ஆய்வுகள் முடிவடைந்த பின்னர், மக்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படும்.

தற்போதைய நிலையில், விசேடமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், வழமையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், சமூக வைத்திய நிபுணர் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply