மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைக்கப்பட்ட பத்மநாபாவின் சிலையை அகற்றுங்கள்-கோரிக்கை வைத்த திலீபன்.! SamugamMedia

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் பத்மநாபாவின் சிலை வைப்பதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா? என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

போராடிய தலைவர்களுக்கு சிலை வைப்பதை எதிர்க்கவில்லை என்றும் ஆனால், முறையான அனுமதிகள் பின்பற்றப்பட்டதா என்பதே தன்னுடைய கேள்வி என்றும் திலீபன் குறிப்பிட்டிருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் முச்சக்கர வண்டியை வாழ்வாதாரமாக கொண்ட முச்சக்கர வண்டி சங்கத்துக்கு அலுவலகம் அமைக்கப்பட்டபோது முறையான அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து, அந்த கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

நகரசபையானது நாளாந்த வாழ்வாதாரத்துக்காக வியாபாரம் செய்யும் வீதியோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளை குற்றவாளிகள் போல் நடத்தி, அவர்களது பொருட்களுக்கும் சேதம் விளைவித்து, அள்ளிச் செல்வதாக கு.திலீபன் குறிப்பிட்டிருந்தார்.

நகரசபை செயலாளர் மற்றும் நகரசபையினர் என்ன செய்கின்றனர்? உள்ளூராட்சி திணைக்களம் என்ன செய்கிறது? இது தொடர்பாக பொலிஸாருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆகவே, முறையற்ற விதத்தில் இந்த சிலை அமைக்கப்பட அனைவரும் ஒத்துழைத்துள்ளார்கள். ஆனால், அப்பாவி மக்களுக்கு எதிராக சட்டத்தை காவித் திரிகிறார்கள்.
இனிமேல் வவுனியா நகரில் வீதியோர வியாபாரிகளை நகரசபை அகற்றுவதாக இருந்தால், முதலில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறும் அதனை அகற்றாமல் விட்டால், வீதியோர வியாபாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply