வரலாற்றைத் திரிவுபடுத்தும் கடற்படை! வெடியரசன் கோட்டைக்கு அருகிலுள்ள தமிழ் பௌத்த எச்சத்திற்குப் பதாகை வைப்பு! SamugamMedia

நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டைக்கு அருகில், 50 மீற்றர் தூரத்திலுள்ள தமிழ் பௌத்த எச்சத்திற்கு அண்மையாக இலங்கைக் கடற்படையால் வரலாற்றைத் திரிவுபடுத்தி தகவல் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

வெடியரசன் கோட்டை 2007 ம் ஆண்டு வர்த்தகமானி மூலம் தொல்பொருட் சின்னமாக அடையாளப்படுததப்பட்டது.

அதற்கு அருகில் சுமார் 50 மீற்றர் தூரத்தில் பௌத ஸ்தானத்தின் எச்சங்கள் மூன்று இடங்களில் காணப்படுகின்றன. அவை 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமே வர்த்தகமானியில் தொல்பொருட் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் திடீரென கடற்படையினரால் வெடியரசன் கோட்டைக்கு அருகிலுள்ள பௌத்த ஸ்தானத்திற்கு அண்மையாக தகவல் பதாகை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்டுள்ளது. 

சிங்கள பிராகிருதமொழி எழுதது இங்கு உள்ளதாகவும், சிங்கள பௌத்தத்திற்குரிய  எச்சம் காணப்படுவதாகவும் அந்தத் தகவல் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது தவறானது என்றும் வரலாற்றைத் திரிவுபடுத்துவதாகவும் முன்னாள் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு காணப்படுபவை 14-15 ஆம் ஆண்டு நூற்றாண்டுக்குரிய தமிழ் மொழியில எழுதப்பட்ட கல்வெட்டுக்கள். சில தமிழ்ச் சொற்களை எழுதுவதற்கு கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

கல்வெட்டு மூலாதாரத்திலிருந்து அங்கு எழுதப்பட்ட பௌத்த ஸ்தானம் தமிழருக்குரியது என்பது தெரிய வருகின்றது. என்று புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

இதேவேளை அங்கு வைக்கப்பட்ட தகவல் பதாகையை தொல்பொருட் திணைக்களமே நட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களைத் தொல்பொருட் திணைக்களம் முற்றாக மறுத்துள்ளது. 

அதேவேளை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பனவும் அதனைத் தாம் வைக்கவில்லையென மறுத்துள்ளனர்.

இதற்கிடையில் இலங்கைக் கடற்படையினர் தாம் நாட்டியுள்ள  தகவல் பதாகையை அகற்ற வேண்டாமெனக் கோரிக்கை விடுத்ததாக  நெடுந்தீவுப் பிரதேசசபைத் தவிசாளர் நல்லதம்பி சசிக்குமார் தெரிவித்துள்ளார். முறையான அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது தகவல் பலகையிலுள்ள விடயங்கள் சரியானவையா என்று தொல்பொருட் திணைக களத்திடம் உறுதிப்படுத்திய பின்னரே காட்சிப்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

இதேவேளை  கடற்படையின் பேச்சாளர் இணைய ஊடகமொன்றிற்கு, இலங்கை அரசாங்கத்தால் புரதான முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வர்த்தகமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட வெடியரசன் கோட்டையில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் கடற்படையால் முன்னெடுக்க முடியாது எனவும் வெடியரசன் கோட்டையில் ஏற்கனவே வைக்கப்பட்ட அறிவித்தல் பலகை சில தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளது. 

அதனை யார் செய்தார்கள் எனவும் எனக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அலுவலகங்கள் இல்லாத காரணத்தால் அறிவித்தல் பலகையை மீண்டும் அதே இடத்தில் நாட்டுமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டது.  அதனடிப்டையிலேயே அறிவித்தல் பலகை வைக்கப்பட்டது. 

தற்போது சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்டிருக்கும் பலகைகளை தமிழ்மொழியில் வைப்பதற்கு உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.- என்றார்

Leave a Reply