ஜனாதிபதி தேர்தலின் போது மக்களின் மனங்களை இன்று வென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவாரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
பொருளாதார நெருக்கடிகளை முற்றாக இல்லாதொழித்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக அவர் வெற்றி பெறுவார் நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுடன் நாடு சிறப்பான முறையில் முன்னேற்றமடையும். வரி அதிகரிப்பு உள்ளிட்டவை மக்களுக்கு சார்பான தீர்மானங்கள் இல்லை என்ற போதிலும், அவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. எனினும் பொருளாதார நெருக்கடிகள் தீர்க்கப்படும் அதேவேளை இவற்றுக்கான நிவாரணமும் வழங்கப்படும்.
அத்தோடு உத்தேச ஊழல் ஒழிப்பு சட்டத்திற்கமைய நாட்டில் ஊழல், மோசடிகள் முற்றாக இல்லாதொழிக்கப்படும். இதன் ஊடாக பொருளாதார மறுசீரமைப்புக்கள் ஒழுக்கத்துடன் முன்னெடுக்கப்படும்.
இவை அனைத்தையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரேயொரு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என்பதை எதிர்தரப்பினர் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர்.