நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்கள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி உயிரிழந்த 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு சபையில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டேன்.
இவ்வாறான நிலை ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்கள்.
கைதிகளில் ஒரு தரப்பினர் முதலில் சிறைச்சாலைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.விகள் மற்றும் போதைப்பொருள் ஆராய்வு ஸ்கேன் இயந்திரத்தை உடைத்துள்ளார்கள். இது திட்டமிட்டதொரு செயற்பாடாகும்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் நாளை (08) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றுக்கு அழைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை பொதுமக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாக இருக்கும் நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணி மற்றும் அங்கு விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹேஷான் ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹேஷான் ஜயவர்தன இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
இந்த மோதலின் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) சீருடையை ஒத்த ஆடை அணிந்த அதிகாரி ஒருவர் சிறைச்சாலையின் உள்பகுதியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காணொளிப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக சிறைச்சாலைக்குள் எவருக்கேனும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்றைய தினம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பான யோசனையை சபையில் முன்வைத்து விடயத்தின் தீவிரத்தன்மையை கருத்திற்கொண்டு 4 மணித்தியால விவாதமொன்றை கோரினார்.
எவ்வாறாயினும், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம், 3 மணித்தியாலங்களை மாத்திரமே விவாதங்களுக்கு ஒதுக்க முடியும் என ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, பிற்பகல் 3.30 முதல் மாலை 6.30 வரை குறித்த விடயம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.





