அம்பாறையில் மாணவிகளுக்கு குழந்தை பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு – (Child Protection, Drug Prevention Program)

(செல்வி வினாயகமூர்த்தி)

அம்பாறை மாவட்டம், பாலமுனை கமு/அக்/அல் ஹிதாயா மகளீர் கல்லூரியில் உயர்தரக் கலைப்பிரிவில் கல்வி கற்கும் 50 மாணவிகளுக்கான குழந்தைப் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு (Child Protection, Drug Prevention Program ) 14.09.2026 திங்கட்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இயங்கி வரும் விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றதுடன்
சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சரியான அணுகுமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வளவாளரினால் குறுவினா தொடுப்பு மூலம் “சிறுவர் உரிமை தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டு, மாணவிகளின் புரிதல்கள் வெளிக்கொணரப்பட்டன.

தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் இணையவழி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பச் சார்புநிலை, மன மற்றும் சமூக அழுத்தங்கள், புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சிறுவர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அவர்களைப் பாதுகாப்பதற்கான சரியான அணுகுமுறைகள் தொடர்பிலும் வளவாளரினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் பாவனை தனிமனித நடத்தையினை எவ்வாறு பாதிக்கிறது. குடும்பம், சமூகக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் தனிநபரோ அல்லது குழுவோ போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள் தொடர்பான தலைப்புகளில்
05 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

வழங்கப்பட்ட தலைப்புகளின் அடிப்படையில் கலந்துரையாடியதுடன், போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் தங்களது கருத்துக்கள், அவதானிப்புகள் மற்றும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர்.

Leave a Reply