12 ஆண்டுக் காதல்… காதலி உயிரிழந்ததால் காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு

இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 26 வயதான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது காதலன் விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெட்டஹெத்த, போபத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சனி செவ்வந்தி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 28 வயதுடைய இளைஞர் எஹலியகொட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் பாடசாலைப் பருவத்திலிருந்து சுமார் 12 ஆண்டுகளாகக் காதல் தொடர்பில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை எஹலியகொடையிலிருந்து பரக்கடுவ நோக்கிப் பயணித்தபோது, அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின்போது இளம் பெண் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும், அதுவே அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த பெண், அங்கிருந்த வாகனம் ஒன்றின் மூலம் எஹலியகொட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தனது காதலி உயிரிழந்ததை அறிந்த இளைஞர், மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்று விஷமருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து,  எஹலியகொட அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply