“சட்டம் பாதுகாக்க வேண்டும், மாறாகப் பயமுறுத்தக் கூடாது” வடக்கு, கிழக்கில் எழுந்த எதிர்ப்பு

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (PSTA) இரத்துச் செய்யக் கோரி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பான மெசிடோ (MESIDO) அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கொடிய பயங்களவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி வருகின்ற போது அதனையும் விடவும் மிக மிக ஆபத்தான சட்டமொன்றை கொண்டு வருகின்ற செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்திலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடிப்படை அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

இதில் பங்கேற்றவர்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட பதாகைகளையும் விழிப்புணர்வு அட்டைகளையும் ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

“PSTA சட்டமூலம் வேண்டாம்”, “நாங்கள் கேட்டது மாற்றம்; ஆனால் கிடைத்தது ஏமாற்றம்”, “அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் வேண்டாம்”, “சட்டம் பாதுகாக்க வேண்டும்; மாறாகப் பயமுறுத்தக் கூடாது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டமான PTA-க்குப் பதிலாகக் கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ள PSTA சட்டமூலம் தொடர்பில், சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பல்வேறு கவலைகளை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக, பயங்கரவாதம் தொடர்பான வரையறைகள், கைது மற்றும் தடுப்புக்காவல் அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மட்டக்களப்பில் போராட்டத்தின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் மக்களின் கூட்டம் கூடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் மற்றும் எழுத்துரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், பொலிஸ், இராணுவம் மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம், பொதுமக்கள் ஒன்றுகூடுவதையும் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதையும் கட்டுப்படுத்தவும், அவர்களைக் கைது செய்யவும் வழிவகை ஏற்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்டத்தின் இறுதியில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரின் பிரதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் ஆகியவற்றுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள PSTA சட்டமூலத்திற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு கலந்துரையாடல்களும் எதிர்ப்புப் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply