இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் புதிதாக 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களை அதிகளவில் சார்ந்துள்ள பகுதிகளில், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கான இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் களஞ்சியங்களில் போதுமான அளவு கையிருப்பு காணப்பட்டபோதிலும், சில தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் எரிபொருள் சந்தையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதன் பிரதான நோக்கம், நிறுவனங்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதும், நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதுமே என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், சில தனியார் நிறுவனங்களால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிர்ணயிக்கும் விலைகளுக்கு இணையாக எரிபொருளை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பின்னணியிலேயே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நேரடி விநியோக வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் புதிதாக 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.





