ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி உத்தரவு! மஹிந்தவின் நிலை என்ன?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்த பின்னர், நீதிமன்றம் இன்று (12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சிரிலிய சவிய கணக்கு தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) முன்னெடுத்து வரும் விசாரணையில் தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் அவர் இந்த முன்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலையாகி விசாரணை தொடர்பான விடயங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மனுவைப் பரிசீலித்த நீதவான், முன்பிணை வழங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இதற்கிடையில், ஷிரந்தி ராஜபக்ஷ கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிரிலிய சவிய அமைப்பின் ஊடாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ஒரு கோடி ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த CT ஸ்கேன் இயந்திரம் வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை என்றும், அதற்காகப் பெறப்பட்ட பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஷிரந்தி ராஜபக்ஷ மீது முன்வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையிலேயே, அவர் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் பரவிவரும் தகவல்களுக்கு அவரது தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 வயதான மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு பாரதூரமான உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் அவரது தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தகைய போலியான செய்திகளால் மஹிந்த ராஜபக்ஷவின் பிம்பத்தை அழிக்க முடியாது என அவரது ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே   கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளால் மஹிந்த ராஜபக்ஷ பலவீனமடைந்துவிட்டதாகச் சித்தரிக்க, எதிர்த்தரப்பினர் இத்தகைய பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்துப் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்களால் பொதுமக்களும் ஏமாற்றமடைய வேண்டாம் என அவர்  தெரிவித்தார்.

Leave a Reply