செட்டிகுளம் கப்பச்சி கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த போக்குவரத்து சிரமங்களுக்கு தீர் வழங்கும் வகையில், புதிய கப்பச்சி பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (10 ) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.
பல வருடங்களாக கப்பச்சி உட்பட பல கிராம மக்களுக்குப் பயன்படக்கூடிய முறையான வீதி வசதிகள் இல்லாதிருந்த நிலையில், இது குறித்து அவதானம் செலுத்தி, கப்பச்சி குளத்தை அண்டிய வீதியைப் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த புதிய பாலத்தைக் கட்டி மக்களிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் 136 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தப் பாலத்தின் மூலம் விவசாயக் குடும்பங்கள் உட்பட சுமார் 400 குடும்பங்கள் நேரடிப் பலனைப் பெறவுள்ளன.
கப்பச்சி குளத்தின் வான் நீர் இலகுவாக வெளியேறும் வகையில் இந்தப் பாலமும் வீதியும் அமைக்கப்படவுள்ளன.
இதன் நீளம் 260 மீட்டராகும் என்பதுடன், 90 நாட்களுக்குள் இதன் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட டித்வா (Ditwa) சூறாவளி காரணமாக நிலவிய வெள்ளப்பெருக்கால் வீதியும் தற்காலிகப் பாலமும் கடுமையாகச் சேதமடைந்திருந்தன.
இதனால் மக்கள் அந்த வீதியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, அவர்களின் அன்றாட செயற்பாடுகளுக்கும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் டி. இம்தியாஸ் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதிகள், பிரதேசவாசிகள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.





