நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகின்றது.
கிளிநொச்சி நகரப் பகுதி மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் இடைவிடாது பெய்துவரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதசாரிகள் தமது அன்றாடப் பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை, பலத்த மழை காரணமாக கொழும்பு, ஆமர் வீதி – பாபர் சந்தி பகுதி நீரில் மூழ்கியுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக புளூமெண்டல், பொரளை டி.எஸ். சந்தி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளை அண்மித்த வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துவதுடன், பயணங்களின்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கலா ஓயா ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, ஆற்றின் நீர்மட்டம் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவை நெருங்கி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால் ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும், அவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 13,200 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது.
நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, எதிர்வரும் மணித்தியாலங்களில் வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, தெதுரு ஓயாவின் நீர்மட்டமும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவை நெருங்கியுள்ளதால், அதன் தாழ்நிலப் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





