வடக்கு மாகாணத்தில் கட்டுப்பாடின்றிச் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் 2027ஆம் ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நவம்பர் 6ஆம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாய்களைக் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகளின் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, நாய்களைப் பிடித்து கருத்தடைச் சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கிய பின்னர், உரிய பராமரிப்புடன் மீண்டும் விடுவிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், சந்தைகள் மற்றும் பொதுக் குப்பைத் தளங்களில் உணவுக் கழிவுகள் நாய்களுக்கு எளிதில் கிடைக்காத வகையில் கழிவு முகாமைத்துவத்தையும் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட கருத்தடைத் திட்டத்தின் கீழ் இதுவரை 9,000 நாய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனினும், பணியாளர்களுக்கான பயிற்சி, சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு உள்ளிட்ட சவால்கள் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் புதிய திட்டத்துக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் உமாபதி என்.திருஞானம் தொழில்நுட்ப ஆதரவு வழங்க முன்வந்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதுடன், வடக்கு மாகாணத்தில் நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைப்பதே நோக்கமாகும்.





