சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் அரசு தலையிடுவது ஜனநாயக விரோதம்- சஜித் சுட்டிக்காட்டு

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உள்ளடக்கங்களை மாற்றுமாறு அரச தரப்பினால் விடுக்கப்படும் அழுத்தமானது, நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையின் சுயாதீனத்தில் மேற்கொள்ளும் தேவையற்ற மற்றும் அபாயகரமான தலையீடாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைத்து ஆற்றிய அவசர உரையின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

“நான் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான் மற்றும் சானக மாதுகொட ஆகியோர் இன்று அவசியமான சிறப்புரிமைப் பிரச்சினைகளைச் சபையில் முன்வைத்துள்ளோம். சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டாகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது தன்னிச்சையாக நிராகரித்தமையே இதற்குக் பிரதான காரணமாகும்.

அரசமைப்பின் கீழ் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய கட்டமைப்புகளுக்கு இடையே அதிகாரச் சமநிலை பேணப்படுகின்றது. இதில் சபாநாயகர் அல்லது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைப்பது சட்டவாக்கத்துறையின் மிக முக்கியமான உரிமையாகும்.

இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைக்கும் உரிமையைப் போலவே, அதிலுள்ள உள்ளடக்கங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளைத் தீர்மானிக்கும் முழுமையான உரிமையும் எதிர்க்கட்சிக்கே காணப்படுகின்றது. அதை விடுத்து, ஆளும் தரப்பு கூறும் உள்ளடக்கங்களை வைத்துக்கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க எதிர்க்கட்சி என்ன அரசின் ஏவலாட்களா? பிரேரணையின் உள்ளடக்கத்தில் தலையிட அரச தரப்புக்கு எந்தவொரு ஜனநாயக உரிமையும் கிடையாது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 29 (1), (2) இன் பிரகாரம் எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய எமது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன. நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒழுங்குப் பத்திரத்தில் உத்தியோகபூர்வமாகச் சேர்க்கப்பட்ட பின்னரும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிலுள்ள விடயங்களை மாற்றுமாறு அரசு வற்புறுத்துகின்றது.

பிரேரணையின் உள்ளடக்கத்தை மாற்றினால் மாத்திரமே விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம் எனக் கூறுவது நிறைவேற்றுத்துறையானது சட்டவாக்கத்துறையைத் தனது அதிகாரப் பலத்தால் அடக்கியாள முனையும் மோசமான செயற்பாடாகும். ஆகவே, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்த தீர்மானத்தை உடனடியாக மீளாய்வு செய்து, அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Leave a Reply