யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாவை மோசடி செய்து தலைமறைவாகியுள்ள நபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர். இதனையடுத்து, அவர் தனது வசிப்பிடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை குறித்த நபர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகவில்லை.
இதனையடுத்தே, தலைமறைவாகியுள்ள நபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



