அனுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் மற்றும் ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினருக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று முற்பகல் வருகை தந்ததைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதாகவும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் மீது பிக்குகள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, பலாங்கொட கஸ்ஸப தேரர் நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸாரால் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, பொலிஸ் அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாகக் கஸ்ஸப தேரர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 11ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவு 02 இல் முன்னிலையாகுமாறு தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
உடமலுவ பொலிஸ் நிலையத்தின் ஊடாக இந்த அறிவித்தல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் விசாரணைக்காக முன்னிலையாகவில்லை எனவும், முன்னிலையாக முடியாமைக்கான காரணத்தையும் அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நாளை (13) விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ருவன்வெலிசாயவுக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இடம்பெற்று வரும் சூழலில், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




