
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வர வேண்டிய தேவை உடையவர்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு மேற்கொண்டு அனுமதி பெறுதல் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திணைக்களத்தின் தலைமை அலுவலகம் கொழும்பு பத்திரமுல்லையில் உள்ளது. பிராந்திய அலுவலகங்கள் மாத்தறை, குருணாகல், கண்டி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருக்கின்றன.
இந்நிலையில் கடந்த வாரங்களில் திணைக்களத்தின் அலுவலங்களில் சேவைகளை பெற சென்றவர்களின் எண்ணிக்கை வகை, தொகை இன்றி காணப்பட்டது.
இது அதிகாரிகளுக்கு மாத்திரம் அன்றி பொதுமக்களுக்கும் சிரமம் கொடுக்கின்ற விடயமாக கண்டு கொள்ளப்பட்டது. மேலும் பொது சுகாதார விதிகள் மீறப்படுகின்ற நிலைமை இருக்கின்றது.
இந்நிலையில் இதற்கான மாற்று திட்டத்தை திணைக்களம் வகுத்து நடைமுறைப்படுத்த தொடங்கி உள்ளது.
திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வர வேண்டிய தேவை உடையவர்கள் முன்கூட்டியே www.immigration.gov.lk இணைய தளத்தில் பதிவு மேற்கொண்டு அனுமதி பெற்று வர வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளார்கள்.
இவ்வாறு முன்கூட்டியே அனுமதி பெறாமல் வருபவர்கள் எவரும் அலுவலகங்களுக்குள் பிரவேசிக்க கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.






