விலைவாசித் துன்பத்தில் சிக்கி, விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், அரிசி – பருப்பு விலைவாசிகளை பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை என்று கூறி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரிப்புக் காட்டியுள்ளார். கி.மு 31இல் பிறந்து, உலகை அளந்த எங்கள் அய்யன் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிச்சென்ற ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வாக்கியத்துக்கு இணங்க நாமும் சிரித்து வைப்போம் என தமிழ் முற்போக்குக் கூட்டணிதலைவர் மனோ கணேசன் எம்.பி. கூறியுள்ளார்.
இந்த ராஜபக்ஷ அரசுக்கு அடிப்படைபொருளாதார அறிவு இல்லை. பொருளியல் விஞ்ஞான கேள்விகளுக்கான பதில்கள், அடித்துக் கேட்டாலும் இவர்களிடம் கிடைக்காது. தெரியாத வேலையை செய்ய போய் இப்போது இவர்கள் மூக்குடைந்து போய் இருக்கின்றனர்.
அரிசி, பருப்பு விலைவாசிகளை பற்றி பேசத் தான் பதவிக்கு வரவில்லை என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கூற்றுப் பற்றி மனோ எம்பி மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் முதல் அலையின் போது, முதன் முறையாக நாட்டு மக்களை விளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அன்று உரையாற்றினார். அந்த உரையில் அவர் கூறிய பிரதான விடயம் ஒன்று இருந்தது. அது என்ன?சமன்மீன்டின், பருப்பு, பால்மா ஆகிய அத்தியாவசிய பொருள்களின் விலைகளைக் குறைப்பேன், அவற்றின் கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவேன் என்று தனது உரையில் ஜனாதிபதி கூறினார்.
இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது வேறு விடயம். அவரது வர்த்தமானி விலைகளில் சந்தையில் பொருள்களைத் தேடியலைந்து மக்கள் ஏமாந்து போனமைதான் மிச்சம்.சீனிக்கு ரூ. 49.75 என்ற மிகப்பெரிய வரிக் குறைப்பை இந்த ஜனாதிபதி செய்தார். வரி குறைந்தது. இதனால், சுமார் ரூ.1,595 கோடி வருமானத்தை திறைசேரி இழந்தது.
ஆகா, அப்படியானால் இந்த பெரும் தொகை, பாமரமக்களுக்கு விலைக் குறைப்பாக கிடைக்கும். அதாவது சீனிஅரசாங்கம் சொல்லும் குறைந்த விலை யில் கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம்.கடைசியில், இந்த ரூ.1,595 கோடி திறைசேரிக்கும் போகவில்லை. மக்களுக்கும் கிடைக்கவில்லை. எங்கே போனது? யாருக்கு கிடைத்தது? இதுபற்றி ஜனாதிபதி இதுவரை பதில் கூறவில்லை.
இதற்கிடையில் ஜனாதிபதி அரிசி, உணவு தானிய மொத்த வியாபார புறக்கோட்டை கடைவிதிக்கும் போய் அங்கேகடைகளில் சற்று நேரம் கணக்கு பிள்ளை வேலையும் பார்த்தார். பதுக்கப்படும் பொருள்களைத் தேடிக் கண்டு பிடிக்கிறேன் எனத் தனது இராணுவ அதிகாரி ஒருவரையும் நியமித்தார். அவரும் ஆலைகளைப் பிடிப்பேன், களஞ்சிய சாலைகளை உடைப்பேன், திறப்பேன் என்றார் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. கடைசியில், அரிசி விலைகள் தொடர்பில், ஜனாதிபதியின் வர்த்தமானிகளைத்தூக்கிக் கடாசி விட்டு பாரிய ஆலை அதிபர்கள்தான் விலைகளைத் தீர்மானித்து அறிவித்தார்கள்.
இப்போது அந்த இராணுவ அதிகாரியும் காணாமல் போய்விட்டார்.சந்தைப் பொருளாதார நாட்டில், பொருள்களின் விலைகளை, தேவை -விநியோகம் ஆகிய வைதான் தீர்மானிக்க முடியும். இரண்டும் சமபலத்தில் இருக்கவேண்டும். தேவை கூடி, விநியோகம் குறைந்தால் விலை கூடும். தேவை குறைந்து, விநியோகம் கூடினால் விலை குறையும். இந்த பொருளாதார அறிவு என்னிடம் உண்டு. எங்களிடம் உண்டு. இவர்களிடம் இல்லை.
ஆகவே, இந்த இராணுவ அதிகாரிகள் தடாலடியாக விலைகளைத் தீர்மானிக்க முடியாது. அரசாங்கம், குறிப்பிட்ட பொருள்களின் இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அவதானித்து, வரி குறைப்பு, வரி விதிப்பு என்ற நிர்வாகத்தை மட்டுமே செய்ய வேண்டும்.
இராணுவ, சுங்க, வரி அரசாங்க அதி காரிகளை கொண்டு, வர்த்தக சமூகத்தை மிரட்டி, காரியமாற்ற முடியாது. மிரட்டினால், போதுமடா சாமி அல்லது போதுமடா ஆமி’ என்று கூறிவிட்டு வர்த்தக சமூகம் கடைகளை மூடி விட்டு வீடுகளில் இருப்பார்கள். வேறுவழியில்லை. சும்மா முரண்படவேண்டாம். கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள் என என் நண்பர்களுக்கு நான் சொன்னேன்.
இந்த ராஜபக்ஷ அரசுக்கு அடிப்படை பொருளாதார அறிவு இல்லை. பொருளியல் விஞ்ஞான கேள்விகளுக்கானபதில்கள், அடித்துக் கேட்டாலும் இவர்களிடம் கிடைக்காது. தெரியாத வேலையை செய்ய போய் இப்போது இவர்கள் மூக் குடைந்து போய் இருக்கின்றனர்.
இன்று வாழ்க்கை செலவு விலைவாசி கைமீறி போனவுடன் ஜனாதிபதி விலை வாசியைத் தீர்மானிக்க நான் இந்த பதவிக்கு வரவில்லை – என மாற்றிப் போடுகிறார். ஆகவே இடுக்கண் வருங்கால்நகுக! – என்றார்.






