வடமாகாணத்திலிருந்து விடுதலைப்புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 31 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்கள் இன்று ரத்மல்யாய பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
எனினும், வடமாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவு முஸ்லிம் மக்கள் மீள்குடியேறியுள்ள போதிலும், இன்னும் பலர் காணி, வீடு, தொழில் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு தமது சொந்த மண்ணில் மீளவும் குடியேற முடியாது வேறு மாவட்டங்களில் பல்வேறு சிரமங்களை அனுபவித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 31 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென்று இதுவரை ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படாமை அந்த மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த நாட்டில் அமைக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்கள் இழந்துள்ள சொத்துக்களுக்கும் நட்டஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயுதம் ஏந்திய தனிக்குழுவொன்று முன்னெடுத்த இந்த நடவடிக்கையால், வடக்கு முஸ்லிம் மக்கள் பொருளாதாரம், கல்வி, தொழில்வாய்ப்புக்கள் என எல்லாத்துறைகளிலும் அநியாயம் இழைக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
அதுமாத்திரமின்றி, வடக்கு முஸ்லிம்களனின் மீள்குடியேற்றம் முழுமை பெறாத நிலையில், அவர்களின் மீள்குடியேற்ற விடங்களை கையாள்வதற்கு என இந்த அரசாங்கத்தில் ஒரு மீள்குடியேற்ற அமைச்சு கூட உருவாக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினர்.
எனவே, வடமாகாண முஸ்லிம்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றத்தைச் செய்து அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, கல்வி, வீடு, காணி உள்ளிட்ட விடயங்களை செய்துகொடுப்பதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு உரிய இழப்புக்களை வழங்குவதற்கும், ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசே வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும், வடக்கு முஸ்லிம்கள் வெளியேறியவர்கள் அல்ல. மாறாக பலவந்தமாக பாசிச புலிகளால் வெளியேற்றப்பட்டவர்கள், ஒரே நாட்டில் பாசிச புலிகளால் இன சுத்திகரிக்கப்பட்ட அவலம் வடக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே! நீதி எங்கே, அரசே வடக்கு முஸ்லிம்களின் 31 வருட அவலம் எப்போது தீரும், ஆகிய வசனங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தி;யவாறு ஆர்ப்பாட்;டக்காரர்கள் கோசங்களையும் எழுப்பினர்.
வடமாகாண முஸ்லிம்களின் நலனுக்கான அமைப்பு மற்றும் சர்வதேச யாழ். முஸ்லிம் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.








