புத்தளத்தில் 1,120 கிலோ மஞ்சள் மீட்பு!

புத்தளம், நுரைச்சோலை, நாவக்காடு கடற்பிரதேசத்தில் இயந்திரப் படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,120 கிலோ உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும், இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின், விஜய கடற்படையினரின் கீழ் இயங்கும் அதிவேக கப்பல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர் குறித்த பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த கடற்பிரதேசத்தை அண்டிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டனர்.

இதன்போது, குறித்த இயந்திர படகில் 24 மூடைகளில் உலர்ந்த மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, 24 மூடைகளில் அடைக்கப்பட்ட 1,120 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன், குறித்த டிங்கி இயந்திரத்தையும் தமது பொறுப்பில் எடுத்தனர்.

இவ்வாறு, மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சளும், டிங்கி இயந்திர படகும் மேலதிக நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply