நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
தெதுறுஓயா நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு வான் கதவுகளும் இரண்டு அடி வரை திறக்கப்பட்டுள்ளதுடன், செக்கனுக்கு 5600 கன அடி வேகத்தில் நீர் வெளியேற்றப்படுகின்றது.
இவ்வாறு, தெதுறு ஓயா வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.
மேலும், புத்தளத்தில் உள்ள 16 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள போதிலும், இதுவரை எவரும் இடம்பெயரவில்லை என்பதோடு, தொடர்ச்சியாக மழை பெய்தால் தெதுரு ஓயாவின் மேலதிக வான் கதவுகளும் திறக்கப்படலாம் என குறிப்பிட்டார்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






