அநேகமான உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் ‘ஏ 30’ என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பில் இலங்கையிலும் பரவும் அச்சுறுத்தல் நிலை இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்தார்.
ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
திருமண நிகழ்வுகள் மற்றும் மரண சடங்குகளின்போது சுகாதார விதிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் செயற்படுவதன் காரணமாக இந்த வைரஸ் அதிகளவில் பரவலடைவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் புதியவொரு திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
பைசர், அஸ்ட்ராசெனிக்கா உள்ளிட்ட பிரதான வகைகளைச் சேர்ந்த சகல வகை தடுப்பூசிகளினூடாகவும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை உடைத்தெறிவதற்கான தன்மை புதிய திரிபான ‘ஏ 30’ திரிபிடம் இருக்கின்றது.
இந்தப் புதிய திரிபு பரவலடைந்தால் பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று முழு உலகமும் எச்சரிக்கை நிலையுடன் செயற்பட்டு வருகின்றது.
ஆகவே, இது தொடர்பில் நாமும் அவதானம் செலுத்த வேண்டும்.
கொரோனா முற்றாக நிறைவுக்கு வந்துவிட்டது என்று எண்ணி மக்கள் செயற்பட்டால் மேலும் நான்கே வாரங்களில் இந்தத் திரிபின் பிரதிகூலத்தை அனுபவிக்க நேரிடும் – என்றார்.






