தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள தீர்மானங்கள்!

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

தமிழ் பேசும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்துவரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாசைக்களைத் திருப்திப்படுக்கக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை பிரதிநிதித்துப்படுத்தும் அதேவேளையில், தமிழ் மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை, அவை உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையோடு முன்வைத்துள்ளனர்.

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்.

அரசாங்கத்தினாலும், அரசாங்க ஆதரவுடனும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

பல்லின, பல்மொழி. பலமத மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் அனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நாம் நிராகரிக்கின்றோம் ஆகிய தீர்மானங்களை முன்வைத்துள்ளனர்.

மேலும், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது சந்திப்பு அடுத்த சந்திப்பு அடுத்த இருவாரங்களுக்குள் நடாத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பில், தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சியில் கலந்துகொள்ளாதற்குக் காரணம் என்ன, என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் பதிலளிக்கையில்,

இதுதொடர்பான கலந்துரையாடல் ஏற்கனவே தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளுடன் சினேகபூர்வமான அடிப்படையில் நடைபெற்றிருக்கின்றது. இன்று அடையாள ரீதியாக இச் சந்திப்பு நடைபெற்றிருந்தாலும், மேலும் இதை முன்கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது என்ற விடயத்தில் நாங்கள் திடமாக இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இத்தீர்மானங்களை முன்வைத்திருந்தனர்.

Leave a Reply