புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு இன்று புதிய வீடு ஒன்றுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவால் இந்த வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இவர் அண்மையிலேயே ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவரது பெற்றோர் உயிரிழந்துள்ளதுடன் இவர் தற்போது சகோதரியுடன் வசித்து வருகின்ற நிலையில், இராணுவத்தினரிடம் உதவியை கோரிய நிலையில் இந்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அதேவேளை, குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பம் ஒன்றுக்காக உடுவில் பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட புதிய இல்லம் ஒன்றும் பயனாளிகளிடம் இராணுவத் தளபதியால் கையளிக்கப்பட்டது.
அத்துடன், 4 மில்லியன் தென்னங்கன்றுகளை பயிரிடும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவால் 12 ஏக்கர் நிலப்பரப்பில் 800 தென்னங்கன்றுகள் நாட்டும் வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வேலைத்திட்டத்தை நினைவுகூறும் முகமாக யாழ்ப்பாண பிரதேசத்தை சேர்ந்த 50 பேருக்கு உலர்உணவு பொருட்களும் தென்னங்கன்றுகள் மற்றும் பனம் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தினால் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7,000 தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு உட்பட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.









