திருமலையில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு!

திருகோணமலையில் முதன் முதலாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் இன்று தம்பலகாமத்தில் உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவால் திறக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ‘சௌபாக்கிய தெக்ம’ கொள்கை பிரகடனத்தில், உள்நாட்டில் அனைத்து வகையான பயிர்களை உற்பத்தி செய்கின்ற வேலைதிட்டத்திற்கு அமைய, திருகோணமலை மாவட்டத்திலும் பாரிய பரப்பளவில் முந்திரிகை பயிர் செய்யப்பட உள்ளதாகவும் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் மரமுந்திரிகை இத்திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து இடங்களிலும் மரமுந்திரிகை கன்றுகளை வழங்க உள்ளதாகவும் மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சாரங்கா ரத்னாயக்க குறிப்பிட்டார்.

மேலும், இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், கந்தளாயில் அமையப்பெற்ற பலவருட காலமாக இயங்காத நிலையில் உள்ள சீனி ஆலையை வெகு விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அங்கு காணப்படும் பழைமையை ஆவ்வாறே பேணி அதனை ஒரு தொல்பொருள் கண்காட்சியகமாக மாற்றியமைத்து அதற்கருகில் புதிய தொழினுட்பங்களுடன் கூடிய ஆலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள. மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே. ஸ்ரீபதி மற்றும் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் சம்பிக்க பண்டார எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply