புத்தளம் – முள்ளிபுரம் பகுதியில், போதைப்பொருள் வியாபாரத்தை தடுப்பதற்காக மக்கள் நேற்று இரவு ஒன்றுகூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக போதைப் பொருள் வியாபாரம் அதிகரித்து வருவதினால், அப்பகுதி மக்கள் நேற்று இரவு போதைப் பொருள் வியாபாரம் செய்கின்றவரின் வீட்டிற்குச் சென்று போதைப்பொருள் வியாபாரத்தை நிறுத்துமாறு கூறி மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது அப்பகுதி மக்கள் தனது வீட்டிற்கு பலவந்தமாக வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளைத் தாக்கியதினால், மனைவி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் வியாபாரி புத்தளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதி மக்களும் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்கு சென்றவேளை, பொலிஸார் இருவரை மாத்திரம் முறைப்பாடு செய்யுமாறு கூறி அனுமதி வழங்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
எனினும், பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நின்ற மக்கள் அனைவரையும் முறைப்பாடு செய்ய அனுமதிக்க வேண்டுமென கூறி மக்கள் பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.








