கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 78 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி மது ஒழிப்பு பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
இதன்போது சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மது ஒழிப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 61 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பித்தளை சுருள் இரண்டும் மீட்கப்பட்டது.
அத்துடன் தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோத கசிப்பினை விற்பனைக்கு கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவரையும் தருமபுரம் பொலிசார் வீதிச்சோதனையின் மூலம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 17.250 லீட்டர் கசிப்பு தருமபுரம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மது ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்துள்ளார்.






