
மத்திய மற்றும் மாகாண அரச சேவையில் பட்டதாரி அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 4 கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் நாளை திங்கட் கிழமை மேற்கொள்ளும் சுகவீன விடுப்புடன் கூடிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துக்கு வடக்கு மாகாண அரச சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சம்பள முரண்பாடுகளை நீக்குதல், பொருத்தமான பதவியுயர்வு நடைமுறைகளை வழங்குதல், திறமை மற்றும் தராதரத்துக்கு ஏற்றவாறு கடமைகளை வழங்குதல், அனைத்து பட்டதாரி பயிலுனர் அலுவலர்களுக்கும் உடனடி நிரந்தர நியமனம் வழங்குதல் போன்ற கோரிக்கைளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் மற்றும் பணிக்கு அமர்த்தப்பட்ட பட்டதாரிகள் சங்கம் ஆகியவற்றால் நாளை திங்கட் கிழமை முன்னெடுக்கப்படும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு நாமும் ஆதரவு வழங்குகின்றோம்.
வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை திங்கட் கிழமை ஒன்றுபட்டு சுகவீன விடுப்புடன் கூடிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துக்கு பேராதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





