
புங்குடுதீவு, வல்லன் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன. அதைத் தடுக்க அனைவரும் அணிதிரள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு, 10 ஆம் வட்டாரத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் மணியம் தோட்ட வீதிக்கு அண்மித்த காணியொன்று கடற்படையினரின் தேவைக்காகக் சுவீகரிக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் இந்தக் காணியைச் சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. மீண்டும் காணியைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 11 மணியளவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் அதைத் தடுக்க ஒன்றுகூட வேண்டும் என்று வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அழைப்பு விடுத்துள்ளார்





