குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்! சம்பிக்க

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் தொடர்பில் இணையத்தளத்தில் தேடும்போது, அதில் நனோ யூரியா என்ற தகவல்களே கிடைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று காலை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஊழல் சந்தேகம் தொடர்பான தமது கருத்துக்கு எதிராக குற்றப்புலனாய்வுத்துறையில் முறையிடப்போவதாக கூறியமைத் தொடர்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் நனோ நைட்ரஜன், இந்தியாவில் 480 ரூபாவாக விலை குறிக்கப்பட்டுள்ளது. டொலரில் பார்க்கும் போது 6 டொலர்கள். எனினும் இலங்கை அதனை 25 டொலர்களுக்கு கொள்வனவு செய்கிறது.

இது தொடர்ந்தும் இடம்பெறுமானால் 8,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சீனாவின் சேதனைப்பசளையை 92 ரூபாவுக்கு கொள்வனவு செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் முழுமையான செறிவுடன் உற்பத்தி செய்யும்போது, 30 ரூபாவுக்கு விவசாயிகளால் பெற்றுக்கொள்ளமுடியும்.

எனவே, உள்ளூரில் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய வழி இருக்கும்போது ஏன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும் என்பதே தமது கேள்வியாக உள்ளது என்றும் ரணவக்க குறிப்பிட்டார்.

தமது இந்த கருத்துக்களுக்கு எதிராக அமைச்சர் மஹிந்தாநந்த குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்தால் அதனை எதிர்கொள்ளத் தாம் தயார் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Leave a Reply