புலனாய்வு அதிகாரிகளை சஹ்ரான் பலமுறை சந்தித்துள்ளார்! ஹரின்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் புலனாய்வு அதிகாரிகளை தனது கணவர் பலமுறை சந்தித்ததாக சஹ்ரானின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தநிலையில், சஹ்ரானின் மனைவி, வழங்கிய சாட்சியத்தின் பிரதியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவர், பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், சஹ்ரானின் மனைவி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால், அவர் காவல்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக உளவுத்துறை அதிகாரிகளை சஹ்ரான் சந்தித்தார் என்பதை நிரூபிக்க தங்களிடம் ஆதாரம் உள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கௌனிகம வெளியேறும் இடத்தில் காவல்துறையினரால், நிறுத்தப்பட்ட இரண்டு பாரவூர்திகள், உயர் காவல்துறை அதிகாரியின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த காவல்துறை அதிகாரி ஏப்ரல் 21 ஆம் திகதி பிரபலமான ‘மாலு மாலு’ விருந்தகத்தில் இருந்துள்ளார்.

இந்த பாரவூர்திகள் தொடர்பில் நேரில் கண்டவர்கள் கர்தினாலுக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.

இதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் மேலதிக தகவல்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார, கைப்பற்றப்பட்ட இரண்டு பாரவூர்திகளிலும் வெடிபொருட்கள் இருந்ததாக தெரிவித்தார்.

மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்கள் சார்பாகப் பேசுமாறு கோரிய காவல்துறை அதிகாரிகள் குழுவில் இந்த உயர் காவல்துறை அதிகாரியும் இருந்தாரா என்று மனுச நாணயக்கார கேள்வியெழுப்பினார்

Leave a Reply