
வடக்கில் கொரோனாத்தொற்றாளர்கள் தொடர்ந்து அடையாளம்காணப்பட்டுவரும்நிலையில், வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.
மன்னாரில் 26 பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
வவுனியா
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மேலும் 42 பேருக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார்
மன்னாரில் நேற்றுமுன்தினம் 26 பேருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களில் மன்னார் பொது மருத்துவமனையில் 6 பேருக்கும், மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், நானாட்டான் பிரதேச மருத்துவமனையில் 4 பேருக்கும், முருங்கன் ஆதார மருத்துவமனை மற்றும் நானாட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ஆகியவற்றில் தலா 3 பேருக்கும், மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு மற்றும் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச மருத்துவமனை ஆகியவற்றில் தலா 2 பேருக்கும், முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். இங்கு நவம்பர் மாதத்தில் இதுவரை 154 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தாராபுரத்தில் அமைந்துள்ள கொரோனாத்தொற்றாளர்களுக்கான இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தில் வெள்ளநீர் காரணமாக, அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பாதுகாப்புக்கருதி அவரவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.





