தடுப்பூசிகளை ஏற்றியோரை மாத்திரம் பொது இடங்களில் அனுமதிக்க முடிவு

மன்னாரில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டோர் மாத்திரமே பொது இடங்களில் அனுமதிக்கப்படவுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்தார்.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பணிமனையில் நேற்று (12) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதமை மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றால் மன்னாரில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மன்னார் மாவட்டத்தில் வியாழக் கிழமை (11) மேலும் ஐம்பது பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 45 பேர் ஆன்டிஜென் பரிசோதனைகள் மூலமாகவும் 05 பேர் பி.சி.ஆர் பரிசோதனை மூலமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களோடு மொத்தமாக இம்மாதம் 11 ஆம் திகதிக்குள் 240 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சராசரியாக 21 பேர் நாளொன்றுக்கு மன்னாரில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.மேலும் இம்மாதத்தில் இருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 25 மரணங்கள் சம்பவித்துள்ளன. இது, நாட்டின் மொத்த இறப்பு வீதத்தில் 0.95 வீதத்தைக் காட்டுவதாகவும் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதேவேளை நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெறுமாறும் அவர் பொது மக்களை கோரியுள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்களே எதிர்வரும் திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள், பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 89 சத வீதமானோர் முதலாவது தடுப்பூசிகளையும் 71.9 சத வீதமானோர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply