‘ஒப்பரேசன் வெற்றி ஆள் காலி’ என்பது போலவே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது! சிறீதரன்

நாட்டில் தமிழ் தேசிய இனத்துக்குரிய உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் மேம்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஒப்பரேசன் வெற்றி ஆள் காலி’ என்பது போலவே நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் வரவு – செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

அரச செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் அதிக கடன்கள் மற்றும் வட்டிகளை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. எனவே, எப்படி அபிவிருத்திகளை அரசாங்கம் செம்மையாக முன்னெடுக்கும் என தெரியவில்லை.

ஒரு காலகட்டத்தில் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளின் தனிநபர் வருமானத்துக்கு நிகராக இலங்கையின் தனிநபர் வருமானம் அமைந்திருந்தது. மேற்படி நாடுகளில் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டது.

அனைவரும் சமமாக கருதப்பட்டனர். இதனால் முன்னோக்கி பயணிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், இலங்கையில் ஒற்றுமை கட்டியெழுப்பபடவில்லை.

இனவாதம் பரப்பப்பட்டது. யுத்தம் ஏற்பட்டது. இதனால் பொருளாதாரம் கீழ்நிலைமைக்கு வந்தது. நாட்டில் தமிழ்த் தேசிய இனத்துக்குரிய உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் மேம்படும்.

அதேவேளை, இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு முத்திரை குத்த வேண்டாம். இந்த அரசிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது.

சமாதானத்துக்கான இறுதி சந்தர்ப்பமாகவும் இதனை பார்க்கின்றேன். எனவே, தமிழ்த் தேசிய இனத்துக்கான உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே அரசாங்கத்துடன் சண்டையிடுகிறோம்! கம்மன்பில

Leave a Reply