குருநகர் புனித யாகப்பர் ஆலய குண்டு தாக்குதலின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் அனுஸ்டிப்பு

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது அரச படையினரின் விமானங்கள் மேற்கொண்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் 13 ஆம் திகதி சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அன்று காலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் சுடரேற்றப்பட்டு இந்நாள் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.

1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாளில் இலங்கை அரச படையினரின் விமானங்கள் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது திடிரென குண்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது ஆலயத்தில் வழிபாட்டிற்கென ஒன்றுகூடியிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பெரும் பழமைவாய்ந்த கலைநயமிக்க ஆலயமும் பெரும் சிதைவிற்குள்ளானது. ஆலயங்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பல கண்டனங்களும் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

குருநகர் வாழ் மக்களினதும், புலம்பெயர் வாழ் பங்கு மக்களினதும் பங்களிப்புடன் தற்போதைய ஆலயம் மீண்டும் அழகுற கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

பங்குத்தந்தை அருட்திரு யாவிஸ், ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வஞ்சலி நிகழ்வில் இறந்தவர்களின் உறவினர்கள், பங்கு மக்கள், குருக்களென பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply