புத்தளத்தில் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சமையல் எரிவாயுவைப் பெற இன்றும் (15) மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்றமையை அவதானிக்க முடிந்தது.
புத்தளம், பாலாவி, கற்பிட்டி மற்றும் மதுரங்குளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் முடிவடைந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ” சமையல் எரிவாயு இல்லை” என்ற பதாதைகளும் தொங்க விடப்பட்டுள்ளன.
இதனால், சமையல் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக முடிந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வரும் மக்கள் ஏமாற்றத்துடனேயே வீடுகளுக்கு திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
புத்தளம் பகுதிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்ற மதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையத்தில் மாத்திரம் சமையல் எரிவாயு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், புத்தளம், நுரைச்சோலை, கற்பிட்டி, கருவலகஸ்வெவ, முந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக நேரகாலத்துடன் வருகை தந்து வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஒருவருக்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்களை எடுத்துவரும் மக்கள் விநியோகஸ்தர்களுடன் முரண்பட்ட நிலையில் திரும்பிச் செல்கின்றனர்.
வாரத்தில் ஒருமுறையே சமையல் எரிவாயு தமக்கு விநியோகிக்கப்படுவதாகவும் இதனாலேயே சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பிரதேச விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முழுமையாக நிரப்பப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வரும் லொறி எமது விற்பனை நிலையங்களை வந்தடைந்தவுடன் மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு செல்கின்றனர்.
இதனால், விற்பனை நிலையத்திற்கு கிடைக்கும் சமையல் எரிவாயுக்கள் ஒரே நாளிலேயே முடிவடைந்து விடுவதாகவும் சமையல் எரிவாயு பிரதேச விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.






